Prayer Timings

Thursday, September 17, 2009

ரமலான்! மூன்றாவது பத்தில் . . .

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.

அல்லாஹ் அல் குர்ஆனில்,

நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
( அல் குர் ஆன் 4 : 56 )
என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.


திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று.
(அல் குர் ஆன் 78:21-33).


நபிமொழி : "இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா


நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு, இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278),(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.


மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:


முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)


மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர்.


நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பும் தேடவேண்டும்.


எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)


அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.


ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.


நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது..


அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)


ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.


நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது.. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.


இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.


நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27, 29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails